நித்திரை கலைந்த
நடுநிசி ஒன்றில்
நிழல் உலகம் பார்க்க
மனம் துடிக்க
பயத்தை மீறிய துணிச்சலில்
வீதிகளில் நடக்கத் தொடங்கினேன்...
ஆடை மேகம் கலைந்த வானம் நிர்வாணமாய்
இரவு போர்வை போர்த்தி நிற்க
விலக்கி பார்க்க முயற்சிக்கும்
நட்சத்திரங்களின் வெளிச்சம்
வீதியெங்கும் பரவிக்கிடந்தன...
பொதி சுமந்த கழுதைகளாய்
வாகனம் இன்றி சாலைகள்
அசதியில் கண் அயர்ந்திருந்தன....
நோய்வாய் பட்டவன் போல்
சாலை விளக்குகள்
சில மங்கலாய்
சில சிணுங்கலாய் எரிந்தன ...
பகலில் பச்சை விளக்கு வேண்டி
தவம் கிடந்தவர்கள் இரவில்
சிகப்பிலும் கூட சிட்டாய் பறந்தனர்
வசீகர புன்னகையோடு உறவுகள் அழைக்க
விலை பேசிக் கொண்டிருந்தன
வாலிப லீலைகள் ....
நாகரீக ஜோடிகள் சில அரைகுறையாய்
நெருப்பைச் சுற்றி அமர்ந்திருக்க
கையில் கிடார் கிறங்கியபடி இசைக்க ஆல்கோஹால் வாயில் ஆங்கில பாடல் வரிகள்...
பப்புகளில் ஆடி களைத்த அம்மணிகள்
போதை ஆசாமிகள்
திருட்டு முழிகளோடு சில மனிதர்கள்
என நிழல் உலக மனிதர்களால்
நிறைத்தது நடுஇரவு...
ரகசியங்கள் நிறைந்த இன்பங்களை
தரும் இரவுகள் யாவும் ஒன்றை
மட்டும் வெளிப்படையாய் சொல்கின்றன
வாழ்வின் நிலையாமையையும்
நிரந்தரமின்மையையும் காரணம்
சிலருக்கு இன்பமாய் கழியும் இந்த இரவுகள்
பலருக்கு விடிவதே இல்லை.
No comments:
Post a Comment