அன்று காலை சூரியன் உதிக்கும் முன்னரே எழுந்துவிட்டாள் மாயா. வீட்டின் முற்றத்தில் போடப்பட்டிருந்த பந்தலில் இருந்த நாற்காலிகளையெல்லாம் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, ஆங்காங்கே வீசி எறியப்பட்டிருந்த டீ, காபி பிளாஸ்டிக் கோப்பைகளையெல்லாம் பொறுக்கி சுத்தம் செய்து, வாசல் தெளித்து, கோலமிட்டு, வீடு முழுக்க டெட்டால் ஊற்றி கழுவி விட்டாள்.
இரண்டு நாட்களாக சோகம் வழியும் முகத்துடன், இருந்த இடத்தை விட்டு அசையாமல் படுத்துக்கிடந்த சிட்டி, மாயாவைக் கண்டதும் லேசாக வாலை ஆட்டினான். பாவம் வீட்டில் நடந்த களேபரத்தில் சிட்டியை மறந்தேவிட்டிருந்தாள்.
வந்த உறவினர்களில் யாரோ தாங்கள் சாப்பிட்ட மிச்சத்தில் அவனது தட்டில் போட்டிருந்தார்கள். ஆனால் அதை அவன் தொடக்கூட இல்லை என்பது ஒட்டிய வயிறு காட்டிக்கொடுத்தது.
அருகே சென்ற அவள் அவனது சங்கிலியை அவிழ்த்துவிட்டு, “கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வா சிட்டி” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
வேண்டா வெறுப்பாக எழுந்த நின்ற சிட்டி மாயாவையே பார்த்துக்கொண்டிருந்தான். கண்களில் இன்னும் அந்த சோகம் மறையவில்லை.
தனது அறைக்குச் சென்று பார்த்த மாயா அங்கே தேவ் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டாள். மெல்ல அவன் அருகே சென்று தலையை வருடி விட்டாள். இரண்டு நாட்களாக வீட்டிற்கு வந்த உறவினர்களிடமெல்லாம் விடாமல் கேள்வி மேல் கேள்விகள் கேட்டு துளைத்து எடுத்துவிட்டான். வீட்டில் நடந்த துக்கம் என்னவென்று இப்போது அவனுக்கு ஓரளவிற்கு புரிந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
நேராக குளியலறைக்குச் சென்ற மாயா சிறிது நேரத்திற்கெல்லாம் குளித்து உடைமாற்றி, பொட்டு வைத்து வழக்கமாக வேலைக்குச் செல்வது போல் கிளம்பிவிட்டாள்.
அடுக்களைக்குச் சென்றபோது அங்கே மாமியார் ராஜம் கணவனுக்கு காபி கலக்கிக் கொண்டிருந்தாள்.
மாயாவைக் கண்டவுடன் அதிர்ச்சியும், ஆச்சர்யமுமாக, “எங்கே கிளம்பிட்ட?” என்று கேட்டாள்.
“வேலைக்குத்
தான் அத்தை” என்று கூறிவிட்டு ரொட்டித்துண்டுகளை எடுத்து சாப்பிடத்தொடங்கினாள்.
“அடிப்பாவி… என் புள்ள செத்து முழுசா மூன்று நாள் கூட ஆகல. அதுக்குள்ள வேலைக்குப் போய் அங்க எவன டி பாக்கப் போற? என் பெத்த வயிறு பத்தி எரியுதுடி. உன்ன காதலிக்கிறேன்னு எங்கிட்ட வந்து சொன்னப்பவே அவன்கிட்ட சொன்னேன். டேய் வேணாண்டா இந்த அநாதைக் கழுதை. நானே உனக்கு நல்ல பொண்ணா பாக்குறேண்டான்னு. பாவி அவன் கேட்கல” என்று கத்தி கூச்சல் போட ஆரம்பித்தாள்.
“இங்க பாருங்க அத்தை. திலீப்பும் நானும் ஒருத்தர ஒருத்தர் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எவ்வளவோ கனவுகள் கண்டோம். ஆனால் அவர் இறந்து போய்ட்டாருங்கிறதுக்காக வீட்டிலேயே உட்கார்ந்து என்னால அழுதுகிட்டு இருக்க முடியாது. எனக்கு ஒரு பிள்ளை இருக்கான். இனி நான் ஒரு ஆள் சம்பாதிச்சு தான் அவன படிக்க வைக்கணும்” என்றாள் மாயா.
அதற்குள் அங்கு வந்து சேர்ந்த தீபா, “நீங்க அழுதுகிட்டே இருக்க வேணா அண்ணி. எங்க அண்ணனை நீங்க உண்மையா காதலிச்சிருந்தீங்கன்னா உங்க கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீராவது வந்திருக்கும். எங்க அண்ணன் இறந்த அன்னைக்கு கல்லு மாதிரியில்ல உட்கார்ந்து இருந்தீங்க” என்றாள் நா தழுதழுக்க.
“ஹே… தீபா இவ கிட்ட போய் அழுகையைப் பத்தி பேசிகிட்டு இருக்க… அவ வேலைக்கு கிளம்பி போற தோரணையப் பாரு. கண்ணுக்கு மையென்ன, பொட்டென்ன, ஸ்டைலா தலையைப் பிண்ணிக்கிட்டு ஏதோ புதுப்பொண்ணு மாதிரியில்ல போறா… புருஷன் செத்துப்போன முண்டச்சி மாதிரியா இருக்கா?” என்று தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தாள் ராஜம்.
“அத்தை… தயவு செஞ்சி வார்த்தைகளை அடக்கி பேசுங்க… எதுக்காக என்னை நான் மாதிக்கணும்? நான் சாகுற வரைக்கும் நெத்தியில பொட்டு வச்சுக்குவேன். முன்ன இருந்தத விட இன்னும் அழகா மேக்கப் போட்டுக்குவேன். நான் அப்படித் தான்” என்று கூறிவிட்டு விருட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்றாள் மாயா.
அலுவலகம் சென்ற போது அவளது மேஜையில் ஆறுதல் வார்த்தைகள் அடங்கிய அனுதாபக் கடிதங்கள் குவிந்து கிடந்தன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திலீப்பை முதன் முதலாக தனது அலுவலக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியதும் அங்கே தான்.
ஒருமுறை திலீப் மாயாவைப் பார்க்க அலுவலகம் வந்திருந்தான். வழக்கமாக வரவேற்பறையில் தன் ஆசைக் காதலியைப் பார்த்து பேசிவிட்டு உடனடியாக சென்று விடுவான். ஆனால் அன்று அவளது தோழி மேனகா தான் அவனை வம்படியாக உள்ளே வரும்படி அழைத்தாள்.
தயங்கிய படி உள்ளே வந்தவனை, மாயாவின் இருக்கையில் உட்கார வைத்து, சுற்றி நின்று கொண்டு கேள்விகள் கேட்டு திணறடித்துவிட்டார்கள் மாயாவின் தோழிகள்.
எல்லாவற்றுக்கும் பொறுமையாகவும், அறிவோடும் பதில் அளித்த திலீப்பின் பேச்சைக் கண்டு அனைவரும் வியந்துபோனார்கள்.
“மாயா நீங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் தெரியுமா? அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம்.. நீங்க ரெண்டு பேரும் இணை பிரியாம 100 வருஷம் சந்தோஷமா வாழணும்” அன்று தோழிகள் கூறிய வார்த்தைகள் மாயாவின் காதுகளில் மீண்டும் ஒருமுறை ஒலித்தன.
நினைவுகளில் இருந்து மீண்டவள் ஒரு முறை சிரித்துக் கொண்டாள். அனுதாபக் கடிதங்களையெல்லாம் எடுத்து கசக்கி குப்பையில் தூக்கி எறிந்தாள்.
தோழிகள் அனைவரும் வந்து மாயாவின் தோள்களைத் தட்டி ஆறுதல் கூறிவிட்டு சென்றுவிட்டார்கள்.
பேஸ்புக்கை திறந்து பார்த்த மாயாவிற்கு அங்கேயும் பல சோகங்கள் காத்திருந்தன. அவளது பக்கத்தில் அனுதாப இடுகைகளும், தகவல்களும் நிறைந்து கிடந்தன. உடனடியாக பேஸ்புக்கை மூடிவிட்டு ஒரு கப் காபி கலக்கி வரலாம் என்று எண்ணி அலவலகத்தில் உள்ள ஓய்வறைக்கு சென்றாள்.
அங்கே பிராஜக்ட் மேனேஜர் நரேந்திரனும், அவனது அஸிஸ்டெண்ட் அர்ஜூனும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு அப்படியே சட்டென நின்றுவிட்டாள்.
“அர்ஜூன்… மாயாவோட புருஷன் குடுத்து வச்சவன்னு நெனச்சேன். ஆனால் இப்படி அல்ப ஆயுசுல போய் சேர்ந்துட்டானே. ஹும்… இவ்வளவு அழகான, அம்சமான ஒரு பொண்டாட்டி கிடச்சும் ரொம்ப நாள் அனுபவிக்க குடுத்து வைக்கலையே அவனுக்கு. அதான் விதிங்கிறது” என்றான்.
“உண்மை தான் சார்… அழகா பொறந்து தொலைச்சி எத்தனை பேரை ஏங்க வச்சிட்டா தெரியுமா? நான் கூட அவ கல்யாணத்தன்னைக்கு ரொம்பவே வயிறு எரிஞ்சிட்டேன். இனிமே உணர்ச்சிகளை அடக்க முடியாம வாழ்க்கை பூரா செக்ஸுக்காகவும், ஒரு ஆண் துணைக்காகவும் ஏங்கி ஏங்கியே சாகப்போறா. அப்பதான்ஆம்பிளைங்களோட
அருமை தெரியும்” என்றான் அர்ஜூன்.
“அவ ஊன்னு ஒரு வார்த்தை சொன்னா போதாதா… அவ அழகுக்கும், சிவந்த ஒடம்புக்கும் அத்தனை பேர் வந்து நிப்பாங்க… நம்ம எம்.டி உட்பட … ஹாஹ் ஹாஹ் ஹா” என்று சொல்லி இருவரும் சிரித்துக் கொண்டிருக்கையில் “எக்ஸ்கியூஸ்மீ” என்று சொல்லி உள்ளே நுழைந்தாள் மாயா.
இருவரும் சட்டென சிரிப்பை நிறுத்திவிட்டு, சோகமாக முகத்தை வைத்துக் கொண்டனர்.
“சாரி மாயா… உங்க ஹஸ்பண்ட் இறந்திட்டாருன்னு கேள்விப்பட்டதும் ரொம்பவே ஷாக் ஆயிட்டேன். பிராஜெக்ட் விஷயமா வெளியூர் போயிட்டதால உங்க ஹஸ்பண்ட் ஃபியுனரலுக்கு வர முடியல…இன்னிமே தான் நீங்க தைரியமா இருக்கணும்” என்று அபாரமாக நடித்தான் நரேந்திரன்.
லேசான புன்சிரிப்பை உதிர்த்த மாயா “இட்ஸ் ஓகே” என்று கூறிவிட்டு காபி கலக்கத் தொடங்கினாள். சட்டென இருவரையும் திரும்பிப் பார்த்தவள், “இதை விடவா ஒரு பொண்ணு தைரியமா இருக்கணும்?” என்று கேட்டாள்.
அவளது தன்னம்பிக்கை நிறைந்த பார்வையை எதிர்கொள்ள முடியாத இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.
காபி கோப்பையை எடுத்துக்கொண்டு மீண்டும் தனது மேஜைக்கு வருவதற்கும், அவளது மேஜைத் தொலைப்பேசி அழைப்பதற்கும் சரியாக இருந்தது.
இண்டர்காமில் இருந்த நம்பரைப் பார்த்தாள் அது எம்.டி ராகவ்வின் அழைப்பு என்று காட்டியது.
“ஹலோ” என்றாள்.
“என் ரூமுக்கு வரமுடியுமா மாயா?” என்றான் ராகவ்.
தயக்கத்துடன் “ஓகே சார். இப்போ வரேன்” என்று எம்.டியின் ரூமை நோக்கி சென்றாள்.
மாயாவைப் பார்த்த ராகவ் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தான்.
“வாங்க மாயா… அழுத முகத்தோட, பொட்டு இல்லாம, சோகத்தோட இருக்குற மாயாவை எப்படி பார்க்கப் போறேன்னு ரொம்பவே பயந்துகிட்டு இருந்தேன். ஆனா என்னால நம்பவே முடியல.. உங்க முகத்துல கொஞ்சம் கூட சோகம் இல்லை. முன்னவிட இப்போ ரொம்பவே அழகா இருக்கீங்க” என்று புகழ்ந்து தள்ளிவிட்டான் ராகவ்.
“அழுகிறதுனால இறந்து போன என் கணவர் திரும்ப வரவா போறாரு?" என்றாள் அழுத்தமாக.
"நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை மாயா. இறந்து
போனவங்களை நினைச்சு வீணா வருத்தப்படுறத விட இருக்குற வாழ்க்கையை சந்தோஷமா
அனுபவிக்கணும்.என் மனைவி இறந்து போன அன்னைக்கு நான் என்ன நினைச்சேனோ அதை தான் இப்போ நீங்களும் நினைக்கிறீங்க”
அறை சுவற்றில் மாட்டப்பட்டிருந்த
படத்தில் ராகவின் மனைவி சிரித்துக்கொண்டிருந்தாள்.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்த ராகவ்.
சற்று தயங்கியவாறே,“சரி இந்த வாரம் ரெண்டு
நாள் கெந்திங் மலைக்கு போய் ஜாலியா தங்கிட்டு வரலாம்னு
இருக்கேன். வேணும்னா நீங்களும் என்னோட
வாங்களேன். உங்களுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்" என்றான் ராகவ் பல்லை
இளித்துக்கொண்டு.
அவனை நேருக்கு நேராக உற்று பார்த்த மாயா லேசாக புன்னகைத்தாள்.
ராகவின் கண்கள் அகல விரிந்தன.
"மாயா நான் என்ன கேக்குறேன்னு உங்களுக்கு புரியுதா?"
"அநாதை ஆசிரமத்துலேயே பிறந்து வளர்ந்து. யார் யாரோ ஆதரவில் வளர்ந்த எனக்கு இந்த கேள்வி ஒன்னும்
புதுசு இல்ல சார். அதனால எனக்கு அதிர்ச்சியாவும் இல்லை. நீங்க தான் கொஞ்சம் லேட்டா கேட்டுட்டீங்க"
"அது உண்மை தான் மாயா ... நீங்க இவ்ளோ கேசுவலா இதை
எடுத்துக்குவீங்கன்னு தெரிஞ்சிருந்தா எப்பவோ என் ஆசையைத் தீர்த்திருப்பேன். உங்களுக்கு ஒரு உண்மைய
சொல்லட்டுமா... உங்களை முதன் முதலா
இண்டர்வியூல பார்த்த போதே மயங்கிட்டேன். உங்களை நினைச்சு நினைச்சு
பலமுறை ஏங்கி இருக்கேன்.
ஆனா உங்ககிட்ட இதைப் பத்தி நேரடியா பேசுறதுக்கு கொஞ்சம் பயமா
இருந்தது"
"சரி ... அது அது நடக்க வேண்டிய
நேரத்துல தான நடக்கும்.
இப்ப சொல்லுங்க மாயா உங்களுக்கு என்னவா பிரமோஷன் வேணும்.மார்கெட்டிங் மேனேஜெர்? பிராஜக்ட் மேனேஜர்? உங்க பையனுக்கு எந்த
ஸ்கூல்லா அட்மிஷன் வேணும்?
மீண்டும் மாயா உதட்டில் அதே புன்னகை.
இன்னைக்கு நான் இங்க வந்ததே என் வேலைய ரிசைன்
பண்ண தான். போறதுக்கு முன்னாடி
உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் சார்.
செக்ஸுங்கிறது தப்பான வார்த்தை
இல்லஆனா அது யார் கூட, எப்ப, எங்க வச்சுக்குறோங்கிறதுல
தான் ஆறறிவு படிச்ச மனுஷனுக்கும், மிருகத்திற்கும் உள்ள
வித்தியாசம்.
நீங்க கேட்டதுல எனக்கு ரொம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்குற
விஷயம் என்ன தெரியுமா? கணவனை இழந்து தனியா
நிக்குற ஒரு பொண்ணுக்கிட்ட அவளோட சோகத்தை சாதகமா பயன்படுத்தி உங்க மனசுல உள்ள
வக்கிரத்தை வெளிப்படுத்துனீங்க பாருங்க அப்பவே நீங்க ஒரு மிருகத்திற்கு ஈடா ஆயிட்டீங்க. சாரி நான்
மிருகத்தோடல்லாம் செக்ஸ் வச்சுகிறது இல்லை. குட் பை .. என்று சொல்லிவிட்டு இடத்தை
விட்டு அகன்றாள்.
தலையில் சம்மட்டியால் அடித்ததைப்
போன்று இருந்தது ராகவுக்கு. கோபத்தில் அவனது முகம் சிவந்து போனது.
அழைப்பு மணியை வேகமாக அழுத்தினான். பிஏ அனிதா ஓடி வந்து "சார்" என்றாள்.
"அனிதா ....
மாயாவோட பெண்டிங்
பேமென்ட்ஸ் எல்லாம் பார்த்து அவங்களோட கணக்க இன்னைக்கே செட்டில் பண்ணிருங்க" என்றான் ராகவ்.
"என்னாச்சு சார் ... எனிதிங் வெண்ட் ராங்?" என்றாள் அனிதா தயக்கத்தோடு.
"புருஷன் செத்து ரெண்டு நாள் கூட ஆகலை. அதுக்குள்ளே இன்னொரு ஆம்பிள்ளை கேக்குது இவளுக்கு. கெந்திங் போய் ஜாலியா
இருந்திட்டு வரலாம் வாங்கன்னு கூப்பிடுறா" என்றான் ராகவ்.
“ச்ச …இவளை மாதிரி பெண்கள்
இருக்குறதுனால தான் ஒட்டுமொத்த பெண்களையும் இந்த சமுதாயம்
தப்பா பேசுது” என்று கூறி முதலாளிக்கு நல்ல
தொழிலாளியாக நடந்து கொண்டாள் அனிதா.
தனது இருக்கைக்கு வந்த மாயா...
தனது செல்போனை எடுத்து அதில் 'ஜீவா' என்ற பெயரைத் தேடி அழைத்தாள்.
சில நொடிகளுக்குப் பிறகு
எதிர்முனையில் "ஹலோ" என்ற குரல் ...
அது ஜீவாவின் குரலா? ஆமாம் அவனே தான் .. எத்தனை வருடங்களாகிவிட்டது ஜீவாவின் குரலைக் கேட்டு என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
"ஹலோ ஜீவா ...நான் மாயா பேசுறேன்"
எதிர்முனையில் சில நொடிகள்
மௌனத்திற்குப் பிறகு..
"எப்படி இருக்க மாயா?" ஜீவா குரலில் இன்னும் அதே அக்கறை
"நல்லா இருக்கேன் ஜீவா. உன்னை பாக்கணும் போல இருக்கு.. சந்திக்கலாமா" என்றாள் மாயா.
“மாயா நான் இப்ப சிங்கப்பூர்ல இருக்கேன். நீங்க எங்க இருக்க?” என்றான் ஆர்வமாக
"கேஎல்"
"ஓகே மாயா ... நான் நாளைக்கு கேஎல்
வந்திட்டு உனக்கு கால் பண்றேன்" என்றான் ஜீவா.
"ஓகே ஜீவா" என்று இணைப்பை
துண்டித்தாள்.
மாயா தனக்கு போன் செய்து, சந்திக்க வேண்டும் என்று சொல்வதை
ஜீவாவால் நம்பவே முடியவில்லை.
கல்லூரி நாட்களில் மாயாவிடம் தனது கைப்பேசி
எண்ணைக் கொடுத்துவிட்டு அவளிடமிருந்து இப்படி ஒரு அழைப்பு வராதா என்று பலமுறை தவம்
கிடந்திருக்கிறான். ஆனால் மாயா அவனிடம் ஒரு
வார்த்தை கூட பேசியது இல்லை.
மாயாவை தீவிரமாகக் காதலித்தவன் ஜீவா. அவளைத் தான் கல்யாணம்
செய்து கொள்வேன் என்று மிகப் பிடிவாதமாக இருந்தவன். மாயாவிற்கும் இவன் மீது லேசான ஒரு
அபிப்ராயம் இருந்தது.
ஆனால் எல்லாம் கல்லூரியின் இறுதி
நாளோடு உடைந்து தூள் தூள்
ஆகிப்போகுமென்று அவன் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் அவன் அம்மாவால்
தான்..
கல்லூரி ஆண்டுவிழாவிற்கு வந்த அம்மாவை, மாயாவிடம் அறிமுகம் செய்து
வைக்கும் போதே "இவ தான் உங்க மருமகள்" என்று அறிமுகம் செய்து
வைத்தான்.
இதை மாயா சற்றும்
எதிர்பார்க்காதவில்லை என்றாலும் கூட, அவள் அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. மாறாக அவளது முகத்தில் அத்தனை
பிரகாசமும், மகிழ்ச்சியும் இருந்ததைக்
கண்டான்.
ஆனால் அம்மா மாயாவை தனியே அழைத்துச் சென்று நெடுநேரம் ஏதேதோ பேசினாள். திரும்பி வரும் பொழுது மாயா முகத்தில் அத்தனை வெறுமை.
நேரே இவனிடம் வந்தவள், “என்னை மாதிரி அப்பா அம்மா பேர் தெரியாத அநாதையெல்லாம் உங்க வீட்டுக்கு மருமகள் ஆயிட முடியாது ஜீவா” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
கடைசியாக அவன் மாயாவைப் பார்த்தது
அங்கு தான்.. இப்படி என்றாவது ஒரு நாள்
தனது போனுக்கு மாயா அழைப்பாள் என்று நினைத்து தான், தனது கைப்பேசி எண்ணை மாற்றாமல் வைத்திருந்தான்.
பல வருடங்களுக்குப் பிறகு நாளை மாயாவை சந்திக்கப்
போவதால் அவள் என்ன பேசப்போகிறாள் என்பதை எண்ணி எண்ணி அன்றிரவு
முழுவதும் ஜீவாவுக்கு உறக்கமே வரவில்லை.
மறுநாள் கோலாலம்பூர் தித்திவாங்சா
பூங்காவில் மாயாவை மீண்டும் சந்தித்தான் ஜீவா. பார்க்கில் இருந்த ஒரு பெஞ்சில் ஜீவாவும், மாயாவும் அமர்ந்திருக்க, தேவ் அங்கே கையில் ஒரு
பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.
தனது கல்யாணம் முதல் கணவர் இறப்பு வரை அத்தனையும் சொல்லி ஒரே
மூச்சில் சொல்லி முடித்தாள் மாயா.
ஜீவா முகத்தில் அத்தனை அதிர்ச்சியும், சோகமும் நிரம்பி வழிந்தது.
அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாயாவிற்கு இன்னொரு ஆணோடு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது என்ற அதிர்ச்சியை விட அவள் கணவனை இழந்து இப்படி நிர்கதியாகிவிட்டாளே என்பது தான் ஜீவாவை என்னவோ செய்தது.
"உனக்கு ஏன் மாயா இப்படி நடக்கணும்? என்ன கொடுமையான வாழ்க்கை
இது? எல்லாம் என்னால தான்.. அன்னைக்கு எங்கம்மா பேச்சை கேட்காம இருந்திருந்தா இந்நேரம் என்கூட ராணி மாதிரி இருந்திருப்பே” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
“ஜீவா… என் கணவர் இப்படி திடீர்னு கார் விபத்துல இறந்து போவார்னு நான் எதிர்பார்க்கல. ஆனா அவர் எனக்கு நிறைவான
ஒரு வாழ்க்கையையும், தைரியத்தையும்
கொடுத்திட்டு தான் போயிருக்கார். இருந்தாலும் உங்கிட்ட ஒன்னே ஒன்னு கேட்கணும். அதை நீ எப்படி எடுத்துக்கப் போறண்ணு தெரியலை” என்றாள் மாயா.
புரியாமல் விழித்த ஜீவா ‘கேள்’ என்பது போல் தலையாட்டினான்.
“சிங்கப்பூர்ல எனக்கு ஒரு வேலை வேணும். தேவ அங்க ஒரு நல்ல ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்கணும். என் கணவரின் ஆசைப்படி அவனை ஒரு திறமைசாலியா, சேம்பியனா வளர்க்கணும். அதுக்கு நீ தான் எனக்கு உதவி செய்யணும் ஜீவா. இந்த நேரத்துல என் மேல உண்மையா அக்கறை காட்டுறதுக்கு நீ மட்டும் தான் இருக்க” என்றாள் மாயா.
“ம்….செய்றேன்” என்றான் ஜீவா
ஜீவாவின் முகத்தை நெருக்கு நேர் பார்த்த மாயா, “என்னடா இவ இவ்வளவு சுயநலமா இருக்கான்னு மட்டும் நினைச்சுறாத ஜீவா. ஒரு பொண்ணுக்கு உதவி செஞ்சிட்டு பதிலுக்கு அவ உடம்ப கேக்குற ஆண்கள் நிறைஞ்ச உலகத்துல வாழ்றேன். எனக்கு வேற யார் மேலையும் நம்பிக்கை இல்லை” என்று கூறி ஜீவாவின் கைகளைப் பற்றிய மாயாவின் கண்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ணீர் துளிகள்.
“மாயா… என் மேல நீ வச்சிருக்குற நம்பிக்கையை என்னைக்கும் காப்பாத்துவேன். வா போகலாம்” என்று கூறி தேவைத் தூக்கிக் கொண்டு
நடக்கத் தொடங்கினான். முன்னே செல்லும் ஜீவாவை நன்றியோடு
பார்த்துக்கொண்டே அவன் பின்னால் நடந்தாள் மாயா. முற்றும்.
தேவ் எழுதிய கதையைப் படித்துவிட்டு அப்படியே அவனை தன்னோடு சேர்த்து கட்டி அணைத்துக் கொண்டாள் மாயா.
“தேவ் ..நான் நினைச்ச மாதிரியே நீ திறமைசாலியா வளர்ந்துகிட்டு வர. கூடிய சீக்கிரத்துல என் கனவெல்லாம் நினைவாகிடும். இப்பவே இந்த கதையை அமெரிக்காவுல இருக்குற ஜீவா அங்கிளுக்கு மெயில் பண்ணிவிடு. அவர் படிச்சா ரொம்ப சந்தோஷப்படுவாறு” என்று கூறி பேரானந்தம் அடைந்தாள் மாயா.
சட்டென சோகமான தேவ் , “இந்த கதையை சில இடங்கள்ல
ஒரு மகனா இருந்து என்னால் எழுத முடியலை மா. ஆனா நீங்க கேட்டுக்கிட்டதுக்காக அந்த வார்த்தைகளை அப்படியே எழுதியிருக்கேன்.”என்றான்.
அவனது தலைமுடியை கோதிய படியே, “தேவ் .. அம்மாவ நாலு பேரு இப்படி பேசினது மாதிரி, ஒரு ஆணா நீ உன் வாழ்க்கையில எந்த பெண்ணையும் இப்படி பேசிடாத. அது போதும் எனக்கு” என்றாள் மாயா.
சரி என்பது போல் தலையாட்டிய தேவ் “அம்மா… நீங்க ஏன் ஜீவா அங்கிள இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலை?” என்றான் தயக்கத்தோடு.
மாயா முகத்தில் புன்னகை மட்டுமே பதிலாக இருந்தது.
“தேவ் .. இந்த கதைக்கு என்ன பேரு வைக்கப் போற?” என்று கேட்டாள்.
“அதான் மா யோசிச்சுகிட்டு இருக்கேன்” என்றான் தேவ்
“பசுமை நினைவுகள்… எப்படி தலைப்பு நல்லா இருக்கா?” என்றாள் மாயா.
புரிந்து கொண்டவனாய் தலையாட்டிய தேவ் “கதைக்கு ஏற்ற தலைப்பு மா…” என்று கூறி அதையே அந்த கதைக்கு பெயராக வைத்தான்.

No comments:
Post a Comment