செம்பனை தேசம் எங்கள் உயிர் சொந்தம்
பால்மர வாசம் தேக பந்தம்
சாமக்காரச் சத்தம் கேட்டாலே
விழியோர கனவும் விலகுமே
வாழ்வு தேடி எங்கள்
விடியலும் விடியுமே
அழும் பிள்ளையோ ஆயக்கொட்டகையில்
தாலாட்டும் அன்னையோ தோட்ட வேலையில்
பால் மனம் மாறா பிஞ்சை அள்ளி
பால் காட்டுச்சட்டை விலக்கிப் பாலூட்டுவாள்
அவள் அயரா உழைப்பினால் இந்த பசுமை
தேசத்திற்கும் உயிரூட்டுவாள்
தீம்பாராய் பிரிந்து கிடப்பது நிலம் மட்டுமே
திருவிழா வந்து மக்களை ஒன்று கூட்டுமே
திரைப்படம் பார்த்து தோட்டமே திளைக்குமே
அண்டை வீட்டு மீன் குழம்பு வாசம்
அடுத்த வீட்டுக்குள்ளும் மணக்குமே
சண்டை இன்றி வாழுகின்ற சாதிசனம்
தோட்டமெல்லாம் நிறைஞ்சு கிடக்குமே
கடல் தாண்டி வேறு கரை தேடி வந்தோம்
மரம் நட்டுப் பயிரிட்டோம்
மர வீட்டில் வாழ்ந்திட்டோம்
கண்கள் ததும்பும் கனவுகளை
புதிய தலைமுறைக்கு வித்திட்டோம்
இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்பது
மரம் மட்டுமன்று -அன்று
விதைத்த கனவுகளும் தான் ...
No comments:
Post a Comment