மழை நின்ற மாலை அது
மயங்கிக் கிடந்தன மழைத்துளிகள்
புல்லோடு சில, பூவோடு சில...
புழுதி படிந்த மண்
பூப்பெய்திய பெண்ணென
புதுபொலிவு கண்டது...
அடைமழை பிடித்து ஆகாயம் இறங்கி
வந்தவளாய் அங்கே அவள்
ஐந்து வயதிருக்கும் அவளுக்கு
சேற்றில் அவள் பிஞ்சு கால்கள் பதிந்து
சிற்பங்கலாயின...
தேங்கிய நீரை கைகளில்
அள்ளி புற்களில் வீசினாள்
மரங்களிடம் பேசினாள்
பூக்களை கொஞ்சினாள்..
மழைக்கு உதிர்ந்த பூவொன்றை
அதன் காம்பில் ஓட்ட வைக்க முயன்றாள்
பறவைகளை விரல்களால் எண்ணினாள்
பயந்து கத்திய தவளைக்கு ஆறுதல் சொன்னாள்..
சிறு மரங்களை அசைத்து
சந்தோஷச் சாரல் தெறிக்க ச்செய்தாள்...
அவளின் சந்தோஷ புன்னகை
என் விழிவழியே ஊடுருவி
இதயம் கொஞ்சம் இதமாய் தடவி
இதழ் வழியாய் மலர்ந்தது..
சிறிது நேரத்தில் என்னை அவள்
வேலையாளாய் வைத்துக்கொண்டாள்..
கட்டளைகெல்லாம் கீழ்ப்படிந்தேன்..
அவள் எனக்கு தந்த வேலை
சருகு பொறுக்குவது..
இருவரும் சேர்ந்து செடிகளுக்கு பெயர் வைத்தோம்...
இயற்கையின் செல்ல மகளாகவே அவளை நினைத்தேன் ...
தேன் எடுக்க வந்த பட்டாம்பூச்சி ஒன்று
அவளை கண்டு வெடுக்கென்று பறந்தது...
கோபம் கொண்டவளாய் பட்டாம்பூச்சியை
பிடிக்க கட்டளை இட்டாள்..
நான் வேண்டாமென மறுத்தேன் ..
பாவம் என்றேன்...
அழுதாள் கெஞ்சினாள் கொஞ்சினாள்...
பிடித்து தா என பிடிவாதம் கொண்டாள்..
அவளொரு தேவதை என நான் கொண்ட
எண்ணம் உடைந்தது...
பட்டாம் பூச்சியைப் பிடித்து அவள்
கைகளில் கொடுத்து அதற்கு நீண்ட
ஆயுள் தரஇறைவனை வேண்டினேன்..
கைகளில் வாங்கிய பட்டாம் பூச்சியை
முகத்துக்கு நேரே வைத்துக் கேட்டாள்
" பட்டாம் பூச்சி என்ன பார்த்து ஏன்
பயந்து ஓடுன? இன்னிமே இது மாதிரி
செஞ்ச உன்கூட நான் பேசமாட்டேன்" என்று
அதன் சிறகை வருடி பறக்க விடடாள்..
No comments:
Post a Comment