இல்லாள்

காலை 5 மணி. அலாரம் மூன்று முறை அலறிவிட்டு அலுக்காமல் தொடர்ந்து அலறிக்கொண்டிருந்தது. கண்விழித்த அருந்ததி கைப்பேசியின் பொத்தானை அழுத்தி அலாரத்தை நிறுத்திவிட்டு படுக்கையிலிருந்து எழுந்து கழிவறைக்கு  நடந்தாள். காலைக் கடன்களை முடித்து விட்டு குளித்து உடைமாற்றி கண்ணாடி முன் நின்றபோது தான் அரவிந்தின் ஞாபகம் வந்தது அவளுக்கு. உடனே அவசர அவசரமாக சிறிது அலங்காரம் செய்துவிட்டு அறைக் கதவை திறந்த போது பணிப்பெண் கமலா  கையில் காபி கோப்பையோடு நின்றுகொண்டிருந்தாள்.

"காலை வணக்கம் மேடம் " என்று சொன்ன கமலா, கோப்பையை அவளிடம் நீட்டினாள். அதைக் கையில்  வாங்கிக்கொண்டே ஹாலை  நோக்கி நடந்தாள் அருந்ததி.  அங்கே ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் கணவன் அரவிந்த் அயர்ந்து  உறங்கிக்கொண்டிருந்தான். இது வழக்கமாக நடப்பது தான் என்றாலும்  அதை பார்த்து அவளது கண்கள் இன்று சற்றே கூடுதலாக கலங்கின.  வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு அடுக்களைக்கு சென்ற போது அங்கே மேசையில் பசியாறுவதற்கு தயாராக  மீ கோரெங், ரொட்டி, பழங்கள் ஆகியவை   இருந்தன.

" சார் ராத்திரி எத்தன மணிக்கு வந்தாங்க கமலா ?" என்றாள்  அருந்ததி சோகமாக

"சார்  வரும்போது காலையில நாலு மணி இருக்கும் மேடம். காபி கலக்கவான்னு கேட்டேன் வேண்டாம்னு சொல்லிட்டாங்க" என்றாள் கமலா .

" சரி நான் பாத்துக்கிறேன்" என்றவாறு மீண்டும்  அரவிந்தை காண ஹாலுக்கு வந்தாள் அருந்ததி. எந்த சலனமும் இன்றி அரவிந்த்  சோபாவில்  உறங்கிக்கொண்டிருந்தான்.

அருந்ததிக்கு இருபத்தைந்து வயதாகிறது  தலைநகரில் ஒரு பிரபல மென்பொருள்  தயாரிப்பு நிறுவனத்தில் மேனேஜர் பதவியில் பணியாற்றுகிறாள்.அரவிந்தை இருவீட்டாரின் பரிபூரண சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து மூன்று வருடங்கள் ஆகிறது ஆனால் வீட்டில் இன்னும் மழலைச் சத்தம் கேட்கவில்லை. அதைப்பற்றியெல்லாம் அரவிந்துக்கு எந்த கவலையும்  இல்லை. லட்சங்களில் பணம் புரளும் அவனது தொழிலை கோடிகள் ஆக்குவதே அவனது லட்சியம். ஆரம்பத்தில் இதை ஒரு பெரிய விஷயமாகக்கருதாத அருந்ததி நாட்கள் செல்லச்  செல்ல தன் கணவனை நினைத்து கவலைப்பட தொடங்கினாள். 

" அரவிந்த்.... அரவிந்த் " அவள் இரண்டு முறை அழைத்ததும் லேசாக சோம்பல் முறித்தவாறு கண் திறந்தான் அரவிந்த்.

" குட் மார்னிங் " என்றவனின் வாயிலிருந்து வந்த  ஆல்கஹோல் நெடி அருந்ததியை மேலும் கவலையடையச்  செய்தது.

" அரவிந்த் குளிச்சிட்டு வாங்க பசியாறலாம்" என்றாள்  மனசில் உள்ளவற்றை அவனிடம் வெளிக்காட்டாமல்.

" இல்ல அருந்ததி நீ  போய் பசியாறு நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கனும் " என்ற அரவிந்த் மீண்டும்  தூங்க சோபாவில் சாய்ந்தான்.அவனது பதில் அருந்ததியின் பொறுமையை சோதித்தது. 

" அரவிந்த் நான் உங்களோட கொஞ்சம் பேசணும் அதான் உங்கள என் கூட பசியாற கூப்பிட்டேன். அதுவுமில்லாம நாம  ரெண்டுபேரும் சேர்ந்து சாப்பிட்டே ரொம்ப நாள் ஆன மாதிரி தோணுது " என்றாள் கண்களில் தேங்கும் கண்ணீரோடு.

" என்ன அருந்ததி ஒருதடவ சொன்னா உனக்கு புரியாதா. நான் இன்னைக்கு சாயங்காலம் பிசினெஸ் விஷயமா இந்தியா போறேன். நேத்து ராத்திரி தான் முடிவு செஞ்சோம். தயவு செஞ்சி என்ன தொந்தரவு செய்யாம நீ பசியாறிட்டு வேலைக்கு கிளம்பு " என்றான் மிகவும் எரிச்சலோடு. 

அவனது எரிச்சலான வார்த்தைகளை சற்றும்  எதிர்பார்க்காத அருந்ததி நேராக தனது அறைக்குச்  சென்று மெத்தையில் வீழ்ந்து தலையணையில் முகம்புதைத்து அழத்தொடங்கினாள். சிறிது நேர அழுகைக்குப்பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய் மீண்டும் அரவிந்திடம் வந்தாள்.

"அரவிந்த் நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க, நம்ம வாழ்க்கையைப்  பற்றி ஒரு சில விஷயங்கள் உங்க கூட பேசணும். தயவு செஞ்சி என்கூட வாங்க" என்றாள் அவனை பார்த்து கை கூப்பியபடி. சற்று நேரம் யோசித்த அரவிந்த் அறைக்குச்  சென்று குளித்து உடை மாற்றி வந்தான்.

இருவரும் வாசலுக்கு வந்து காரில் புறப்படத் தயாரானார்கள். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் அவ்வழியே  வந்துகொண்டிருந்தார் புட்டு விற்கும் மாணிக்கம். இவர்களை பார்த்தவுடன் வாய் நிறைய புன்னகையுடன் கையை உயர்த்தி வணக்கம் தெரிவித்துவிட்டு சென்றார் . மாணிக்கம் அப்படித்தான், எப்போதும் சிரித்த முகத்தோடு அந்த தாமானையே சுற்றி சுற்றி வந்து புட்டு விற்ப்பார். அவரது கனிவான பேச்சாலும், அன்பான வார்த்தைகளாலும் 
அந்த தாமானில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் மிகவும் பிடித்தமான மனிதராக இருந்தார். 

கார் அருந்ததியின் அலுவலகம் நோக்கி செலுத்திக்கொண்டு இருந்தான் அரவிந்த். 

" என்னமோ பேசணும்னு சொன்னியே? " என்று பேச்சைத்தொடங்கினான் அரவிந்த். சிறிது நேரம் எதுவும் பேசாமல் வந்த அருந்ததி இறுதியில் தன் மௌனம் உடைத்தாள்.

" அரவிந்த் உண்மையை சொல்லுங்க, என்ன பிடிச்சுதான் கல்யாணம் செய்தீங்களா? " என்றாள் அருந்ததி. சிரித்த அரவிந்த் 

" கல்யாணம் ஆகி மூணு வருஷத்துக்கு பிறகு இப்படி ஒரு சந்தேகம் உனக்கு எப்படி வந்தது அருந்ததி? " என்றான் விளையாட்டாக

" நமக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சின்னு உங்களுக்கு ஞாபகம் இருக்குறதே எனக்கு ஆச்சர்யமா`இருக்கு அரவிந்த். இந்த மூணு வருஷத்துல ஒரு நாள் கூட நான் சந்தோஷமா இல்லையே" என்றாள் விரக்தியின் உச்சத்தில். 

" சந்தோஷமா இல்லையா ? வாழ்றதுக்கு இவ்வளவு  பெரிய வீடு, நேரத்துக்கு சுத்தமான சாப்பாடு, எங்க போனாலும் சுகமா போயிட்டு வர காரு, உடுத்துறதுக்கு வித விதமா விலை உயர்ந்த புடவைகள்  இதை விட உனக்கு சுகமான வாழ்க்கை எங்க கிடைக்கும் அருந்ததி. எங்கயோ கம்போங்ல வளர்ந்த உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சு இப்போ சிட்டில வாழ்ந்துகிட்டு இருக்க அதை மறந்திட்டு எத எதையோ உளறாத அவ்வளோ தான் சொல்வேன்" என்றான் அரவிந்த்

" ஐயோ அரவிந்த், நான் சொல்றது உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது நான் கம்போங்ல வளந்தவ தான். ஆனா காசு இல்லனாலும் எங்க வீட்ல எப்பவும் சந்தோஷம் இருக்கும். அந்த சின்ன மர வீட்ல எனக்கு கிடச்ச சந்தோஷம் இங்க இவ்ளோ பெரிய வீட்ல இல்லையே. எப்பவும் இப்படி காச தேடி ஓடிகிட்டே இருந்தீங்கன்னா எப்பத்தான் நீங்க என்கூட நேரத்த செலவிடப்போறீங்க ?" என்றாள் அருந்ததி 

" இதெல்லாம் தெரிஞ்சு தானே என்னை கல்யாணம் பண்ணிகிட்ட. என்னைப்பொறுத்த வரை என் தொழில் தான் என் முதல் மனைவி அதுக்கப்புறம் தான் நீ. இந்த உலகத்துல காசு தான் முக்கியம் அது இல்லேன்னா யாரும் மதிக்க மாட்டாங்க. நீ சொல்ற மாதிரி வாழணும்னா நானும் அந்த மாணிக்கம் மாதிரி ஒரு மோட்டார் வண்டில புட்டையோ,செண்டோலையோ கட்டிக்கிட்டு தெருத்தெருவா அலைய வேண்டியதுதான்" என்றான் 

" நிறுத்துங்க. அந்த மனுஷனப் பத்தி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்ல. உங்கள மாதிரி பணம் , பணம்னு  அலையற பேய் இல்ல அவர். அவரோட குடும்பத்த  எவ்வளவு சந்தோஷமா வச்சிருப்பாருன்னு எனக்கு நல்லா தெரியும் ஏன்னா ஒருகாலத்துல எங்க அப்பாவும் ஒரு செண்டோல் வியாபாரி தான் . எங்க அப்பா நெனச்சிருந்தா எப்பவோ எங்கள விட்டுட்டு பணம் சம்பாதிக்க சிங்கப்பூர் போய் இருக்கலாம். ஆனா எங்க கூட நேரத்த செலவிடனும்னு எங்க கம்போங்லையே சின்னச் சின்னதா வியாபாரம் செஞ்சி எங்கள படிக்க வச்சாரு எல்லாத்துக்கும் மனசு தாங்க வேணும் பணம் இல்லை" என்று இத்தனை நாட்களாய் மனதில் அடக்கி வைத்திருந்ததை ஒரே மூச்சில் கொட்டித்தீர்த்து விட்டாள் அருந்ததி.

அவளது பேச்சு அரவிந்தை திகைக்க வைத்துவிட்டது காரணம் இதற்கு முன் எத்தனையோ  முறை அவர்களுக்குள்  கருத்துவேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால் அருந்ததி அவளது கோபத்தை ஆழ்ந்த மௌனத்தின் மூலம் வெளிபடுத்துவாளே தவிர ஒருமுறை கூட வாய் திறந்து பேசியது இல்லை. இன்று அவளுக்கு என்ன ஆயிற்று ? இத்தனை வெளிப்படையாக பேசிவிட்டாள் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான். இருந்தாலும் தான் ஆண் என்ற கர்வம் அவனை வேறுமாதிரியாகப்  பேசவைத்தது. 

" இந்த அளவுக்கு நீ பேசின பிறகு உனக்கும் எனக்கும் ஒத்துவராது அருந்ததி. கேவலம் அந்த புட்டு விக்கிறவன விட  நான் எந்த வகையிலும் குறைஞ்சு போகல. பணம் சம்பாதிக்கலன்னு கோபப்படுற மனைவியைப் பற்றித்தான் கேள்விப்பட்டு இருக்கிறேன். முதல் முறையா ஏன்டா பணம் சம்பாதிக்க போறன்னு கேக்கிற மனைவிய இப்பத்தான் பார்க்கிறேன். இந்தியா போயிட்டு வந்தவுடன் முதல் வேலையா நம்ம விவாகரத்துக்கு ஏற்பாடு பண்றேன்" என்று கூறி பெருமூச்சு 
விட்டான் அர்விந்த் 

 அவனது இந்த திடீர் முடிவைக் கேட்டு துடி துடித்துப் போனாள் அருந்ததி. 

"அரவிந்த் என்ன சொல்றீங்க? நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கிறீங்க? வாழ்க்கைக்கு பணம் தேவை தான் ஆனா எப்போதும் அந்த பணத்தையே தேடிகிட்டு சரியாய் சாப்பிடாம, தூங்காம, குடும்பத்தோட கொஞ்சம் நேரம் கூட செலவு செய்யாம இப்படி இயந்திரம் மாதிரி வாழறீங்களேனு  தான் அப்படி பேசினேன் . ஒவ்வொரு முறையும் கோயிலுக்கோ, கடைக்கோ, திருமண நிகழ்ச்சிகளுக்கோ போகும் போது எல்லோரும் அவங்க கணவனோடு ஜோடியா வருவாங்க ஆனா நான் மட்டும் தனியா ஒரு அநாதை மாதிரி ஒரு ஓரமா நிப்பேன் தெரியுமா? சரி ஒரு குழந்தை பிறந்தாலாவது அதை வைத்துக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமா மாத்திக்கலாம்னு நெனச்சா அதுக்கும் வழியில்லை.  தனிமை என்ன கொல்லுது அரவிந்த் இப்படி வாழறதுக்கு நான் செத்தாவது போய்டலாம்" என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினாள்.அவளது அழுகை அரவிந்தின் மனதில் சிறு தாக்கத்தையும்  ஏற்படுத்தவில்லை. அவனது எண்ணம் முழுவதும் அவள் தன்னை எதிர்த்து பேசிவிட்டாலே என்று தான் இருந்தது. 

" நான் அப்படித்தான் இருப்பேன். என்னால மத்தவங்கள மாதிரி மனைவிக்கு, பிள்ளைகளுக்குனு தனித்தனியா நேரத்த செலவழிச்சுகிட்டு இருக்க முடியாது.என்னோட கனவு 'அரவிந்த் இன்டர்நேஷனல் கம்பெனி' இந்த  உலகத்தையே திரும்பி பாக்க வைக்கிற ஒரு  நிறுவனமா மாறனும். மலேசியாவிலேயே மிகப்பெரிய  பணக்காரனா நான் ஆகணும் அதுக்கு நீ தடையா இருந்தா உன்னையும் இழக்க தயாரா இருக்கேன். இனி உனக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை " என்றான் அரவிந்த் 

அவனது கடுமையான  வார்த்தைகளைக்  கேட்ட அருந்ததி நிலைகுலைந்து போனாள். 

" நான் இவ்வளவு சொல்லியும் என்னோட உணர்வுகள உங்களால புரிஞ்சுக்க முடியலையே அரவிந்த். இதுதான் உங்களோட இறுதி முடிவாயிருந்தா அதுக்கும் நான் சம்மதிக்கிறேன்" என்றாள். 

அதற்குள் கார் அவளது நிறுவனத்தின் வாசலை அடைந்திருந்தது. கதவைத்திறந்த அருந்ததி கணவனை திரும்பிக்கூட பார்க்காமல் விறு விறுவென்று நடந்து அரவிந்தின் கண்களில் இருந்து மறைந்து போனாள். 

வீட்டுக்கு வந்த அரவிந்த் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு சிகரெட் ஒன்றை பற்றவைத்தபடி யோசித்துக்கொண்டிருந்தான். அவனது சிந்தனை முழுவதும் அருந்ததிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று துடித்தது. தன்னை விட புட்டு விற்கும் மாணிக்கம் அவன் மனைவியை  நன்றாக பார்த்துக்கொள்வதாக அருந்ததி சொன்னதை அவனால் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இப்படியாக யோசித்துக்கொண்டிருந்தவனின் பார்வையில் மாணிக்கம் 
தென்பட்டார். தூரத்தில் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தார் அந்த ஐம்பது வயதான மனிதர். அதை பார்த்த அரவிந்துக்கு மனதில் மிகப்பெரிய சந்தேகம் தோன்றியது. இவ்வளவு பெரிய நிறுவனம் நடத்திக்கொண்டு இருக்கும் தனக்கே நிம்மதி என்பது இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது. தினம் புட்டு விற்று பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கும் அந்த மனிதர் எப்படி இவ்வளவு சந்தோஷமாக சிரித்துக்கொண்டு இருக்கிறார். நிச்சயம் துன்பங்களை 
மறைப்பதற்காகவோ  இல்லையேல் தனக்கு வியாபாரம் நடக்க வேண்டுமென்றோ அவர் சந்தோஷமாக நடிப்பதாகவே  அவனுக்கு  தோன்றியது. நேரடியாக மாணிக்கதிடமே கேட்டு அவரது வாயிலிருந்து உண்மையை வரவழைக்க முடிவு செய்து வாசலுக்கு வந்தான் அரவிந்த். 

அவனைப் பார்த்த மாணிக்கம் மீண்டும் ஒருமுறை கை காட்டி சிரித்தார். 

" மாணிக்கம் ..கொஞ்சம் நேரம் வீட்டுக்கு வந்திட்டு போங்க உங்க கூட பேசணும்" என்ற அரவிந்த் தோட்டத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.

" இதோ வரேன் தம்பி " என்று கூறி மோட்டார் சைக்கிளை வீட்டு முன் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அரவிந்தை நோக்கி சென்றார் மாணிக்கம்.

" அப்புறம் நல்லா இருக்கீங்களா ?" என்று பேச்சு கொடுத்தான்

" எனக்கென்ன தம்பி  நல்லா இருக்கேன். எந்த பிரச்சனையும் இல்லாம அருமையா போயிட்டு இருக்கு வாழ்க்கை " என்றார் சிரித்துக்கொண்டே 

அரவிந்துக்கு மாணிக்கத்தின் பதில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

" எப்படி நல்லா இருக்கேன்னு சொல்றீங்க , இந்த தாமான்ல வீடு வாங்கி குடிவந்ததுல இருந்து  பார்த்துக்கிட்டு இருக்கேன். இதே மாதிரி தினம் வீடு வீடா புட்டு வித்து பொழச்சுகிட்டு இருக்கீங்க. உங்களுக்கு ஒரு நாள் கூட இது மாதிரி பெரிய வீடு வாங்கணும், கார் வாங்கனும்னு ஆசை வரலையா? இப்படி பழைய மோட்டார் சைக்கிள்ல வச்சிக்கிட்டு இவ்வளவு கஷ்டப்படுறோம்னு என்னைக்குமே தோணலையா ? " என்றான் 

" உண்மைய சொல்லனும்னா எனக்கோ, என் மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ இதுநாள் வரைக்கும் இப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்ல தம்பி. எங்க உலகம் ரொம்ப சின்னது. நான் இந்த புட்டு விக்கிற தொழில இந்த ஐந்து வருசமா தான் செய்யுறேன். இதுக்கு முன்ன கொஞ்சநாள் தோட்டத்துல வேலை செஞ்சிருக்கேன், பஸ் ஒட்டியிருக்கேன், என் மனசுக்கு புடிச்ச மாதிரி என்ன என்ன வேலை இருக்கோ அதெல்லாம் செஞ்சிருக்கேன். அப்போ அப்போ குடும்ப 
சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி என் தொழில மாத்திக்குவேன் தம்பி. என் மனைவிக்கு மார்கெட்ல காய்கறிக் கடை வச்சு குடுத்துருக்கேன். ரெண்டு பேருக்கும் வர  வருமானத்த வச்சு ரெண்டு மகன்களையும் நல்லா படிக்க வச்சோம். அவங்களும் நல்லா படிச்சு இன்னைக்கு சமுதாயத்துல நல்ல நிலையில இருக்காங்க. ரெண்டு மகன்களும் எங்க குடும்பத்துக்கு தகுந்த மாதிரி மனைவிகளை அவங்களே தேர்ந்தெடுத்துக்கிட்டாங்க. இன்னைக்கு நானும் என் மனைவியும் ரொம்ப சந்தோஷமா எங்க வயசான காலத்த ஓட்டிகிட்டு இருக்கோம். உங்க அளவுக்கு பெரிய வீடோ, சொகுசு காரோ இல்லாட்டாலும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சி  எங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு காரும், வீடும் சொந்தமா வச்சிருக்கோம் தம்பி  " என்று மாணிக்கம் உற்சாகமாக பேசிக்கொண்டு இருக்கும் போதே அவரது கைப்பேசியில் அழைப்பு ஒன்று வந்தது." தம்பி ஒரு நிமிஷம்" என்று கூறிவிட்டு கைப்பேசியை காதில் வைத்து

" ஹலோ சொல்லுமா தனம்... சாப்பிடத்தானே இதோ கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்  சரி சரி " என்று கூறி இணைப்பை துண்டித்தார். 

சிரித்துக்கொண்டே " போன்ல என் பொண்டாட்டி பேசுனா தம்பி . பாவம் என்ன விட்டுட்டு சாப்பிடவே மாட்டா. நேரத்துக்கு வீட்டுக்கு போயிடுவேன் இன்னைக்குத்தான் கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு பசிக்குது போல அதான் போன் பண்ணிட்டா. நான் வரேன் தம்பி " என்று அவசரமாக கிளம்ப முயன்ற போது மீண்டும் அரவிந்த் பேசத்தொடங்கினான். 

"உண்மையாவே உங்களுக்கு காசு இல்லன்னு எந்த கவலையும் இல்லையா ?" என்றான் அரவிந்த் 

" தம்பி நீங்க எத நெனச்சு இப்படி கேக்குறீங்கன்னு எனக்கு புரியுது. உங்கள விட வயசானவன் என்கிற முறையில சொல்றேன். பணம் வாழ்க்கைக்கு தேவை தான் நான் இல்லனு சொல்லல ஆனா குடும்பம் அதைவிட முக்கியம் தம்பி. இவ்வளவு சொத்து வச்சுருந்தும் நீங்களும் சந்தோஷமா இல்லை, உங்களால மத்தவங்களும் சந்தோஷமா இல்லை. உங்கள மாதிரிதான், நிறைய பேரு காசு காசுனு தேடி அலைஞ்சு வாழ்க்கையில அந்த அந்த காலகட்டத்துல அனுபவிக்க வேண்டிய சந்தோஷம் எல்லாத்தையும் இழந்திடுறாங்க.இந்த மாதிரியே வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு இருந்தீங்கன்னா ஒருநாள் நீங்க கடந்து வந்த பாதைய திரும்பி பாக்கும்போது அங்க காசு மட்டும் தான் தம்பி இருக்கும் மற்ற எல்லா வாழ்க்கையின் சுவாரஸ்யங்களையும் இழந்திருப்பீங்க. இதனால் தான் தம்பி இன்னைக்கு உலகத்துல கள்ளக்காதல் அதிகரிச்சுப்போச்சு. ஆனா உனக்கு கெடச்சுருக்கிற மனைவி சுத்த தங்கம் தம்பி. எனக்கு அந்த பொண்ணப் பத்தி நல்லா தெரியும் என் மகள் மாதிரி அது மனசு கஷ்டப்படாமப்  பாத்துக்கோங்க. நான் ஏதாவது உங்க மனசு வருத்தப்படுற  மாதிரி சொல்லி இருந்தா என்ன மன்னிச்சிடு தம்பி நான் வரேன் " என்று கிளம்ப நினைத்தவர் 
அரவிந்தின் கைகளில் இரண்டு புட்டு பாக்கெட்டுகளை திணித்துவிட்டு 

"என் மககிட்ட குடுத்துருங்க தம்பி விரும்பி சாப்பிடும் " என்று  சொல்லிவிட்டு  அங்கிருந்து நகர்ந்தார்.

அரவிந்த் அந்த புட்டு பாக்கெட்டை பார்த்தான் அவரது மனம் போல் வெள்ளையாய் தெளிந்து இருந்தது. மாணிக்கத்தின் பேச்சு அவனுக்கு சம்மட்டியால் அடித்ததைப் போல் இருந்தது. இத்தனை நாள் எவ்வளவு கேவலமாக வாழ்ந்துவிட்டோம் என்று மிகவும் வருந்தினான். அருந்ததியை பற்றிய நினைவுகளை பின்னோக்கி நகர்த்தினான். முதன் முதலாக அருந்ததியை பார்த்தது, காதலித்த நாட்கள் என்று அவனது மனக்கண்ணில் பிம்பங்களாக வந்து போனது. 
எல்லாவற்றிலும் அருந்ததிக்கு தான் துன்பங்களை மட்டுமே தந்திருப்பதை உணர்ந்தான். அப்போது ஒரு சம்பவம் அவனது நினைவில் நின்றது. திருமணம் ஆன புதிதில் எத்தனையோ இரவுகள் வீட்டிற்க்கே செல்லாமல் இருந்திருக்கிறான். ஒருமுறை அவள் குழந்தை பற்றி பேச்செடுத்த போது 

" ஏன் இப்படி அலையிற ? கல்யாணம் ஆகி ஒருவருஷம் தான ஆச்சு அதுக்குள்ளே கொழந்த கொழந்தனு இப்படி கேட்டுக்கிட்டு இருக்க?" என்று அவளை மிக மோசமாக ஏசியதை நினைத்து அவன் கண்கள் குளமாயின. இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் ஒரு தனியார் நிறுவனத்தைத் தேடி அதில் வேலைக்கு சேர்ந்துவிட்டாள் அருந்ததி. அவள் குழந்தை நினைப்பை மறக்கத்தான் வேலையில் சேர்ந்தாள் என்பது அரவிந்தின் புத்திக்கு இப்போது தான் எட்டியது. உடனே தன் அன்பு மனைவியை பார்க்க வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. 

உடனடியாக தன் மேனேஜர் பிரகாஷுக்கு போன் செய்தான். எதிர்முனையில் பிரகாஷ் " ஹலோ " என்றான்.

" பிரகாஷ், இன்னைக்கு சாயங்காலம் என் கூட இந்தியாவுக்கு இன்னொரு ஆள் வரப்போறாங்க அவங்களுக்கு ஒரு சீட் புக் பண்ணிடுங்க. அப்புறம் நாளைக்கு நான் போகவேண்டிய கிளைன்ட் மீட்டிங்கை கேன்சல் செய்திடுங்க " என்றான் அரவிந்த் 

" சார், அது ரொம்ப முக்கியமான மீட்டிங், நம்ம கம்பெனிக்கு பெரிய லாபம் வரவேண்டிய ப்ராஜெக்ட் " என்றான் பிரகாஷ் 

" எனக்குத் தெரியும் பிரகாஷ். நான் சொன்னத செய்யுங்க. அப்புறம் அங்க சென்னைல ஏதாவது ஒரு நல்ல ட்ராவல்ஸ் ஏற்பாடு செய்யுங்க. நான் ஒரு வாரம் நார்த் இந்தியா டூர் போறேன் " என்றான் உற்சாகமாக 

" இப்போ புரியுது உங்க கூட யார் வராங்கன்னு. ரொம்ப சந்தோஷம் சார்.எல்லா ஏற்ப்பாடுகளையும் சிறப்பா செஞ்சிட்டு உங்கள இன்னைக்கு ராத்திரி பாக்கிறேன் " 
என்று கூறி பிரகாஷ் இணைப்பைத் துண்டித்தான்.

மகிழ்ச்சியின்  உச்சத்தையே தொட்டு விட்ட அரவிந்த் உடனடியாக அருந்ததியை பார்க்கக் கிளம்பினான் அங்கே அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பதை அறியாமல். 

அருந்ததியின் அலுவலகம் முன்பு காரை நிறுத்திவிட்டு அவளின் கைப்பேசியைத் தொடர்பு கொண்டபோது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவளின் வருகைக்காக வெகுநேரம் காத்திருந்தவன் பொறுமை இழந்து அலுவலக வரவேற்பாளருக்கு தொடர்பு கொண்டான். அவள் சொன்ன தகவல் அரவிந்துக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது காரணம் அருந்ததி காலையிலேயே தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு போய்விட்டதாக தெரிவித்தாள்.

 மனம்  முழுவதும் நிரம்பிய குழப்பத்தோடு தலைநகரின் எல்லா வீதிகளிலும் தன் மனைவியை தேடிக் களைத்துவிட்டான் அரவிந்த். எங்கே போனாள் ?என்ன ஆனாள் ? என்று தெரியாமல் அவன் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்துகொண்டு இருந்தது. இறுதியாக வீட்டை அடைந்து படுக்கையறைக் கதவை திறந்த போது அருந்ததி மெத்தையில் உறங்கிக் கொண்டு இருந்தாள். அரவிந்த் அழுவதா, சந்தோஷத்தில் சிரிப்பதா என்று குழம்பிப்போனான் அப்போது மெத்தைக்கு அருகே அந்த விவாகரத்துப்பத்திரம் அவன் கண்ணில் பட்டது. அவள் யாரைப்  பார்த்துவிட்டு வந்திருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.

அவள் அருகே அமர்ந்தவன் மெதுவாக அவளின் தலையைக்  கோதினான். அருந்ததி லேசாக கண்திறந்தாள் அருகே கணவன் அமர்ந்திருப்பது தெரிந்தது. 

அவளது திருமணம் வாழ்வில் இதுவரை ஒருமுறை கூட அரவிந்த் அவளிடம் இது போன்று அன்பாக நடந்து கொண்டதில்லை. 

" அருந்ததி என்ன மன்னிச்சிடு. இதுநாள் வரை நான் செய்த தவறுகளையெல்லாம் உணர்ந்திட்டேன். நான் என் குடும்பம் தான் முக்கியம்னு திருந்தி வரும்போது நீ என்ன பிரிஞ்சு போய்டாத மா ப்ளீஸ் " என்றான் அவளின் கைகளைப்பற்றி, அருந்ததி எதுவும் பேசாமல் அவனிடத்தில் அந்த கடிதத்தைக் கொடுத்தாள். 

" அருந்ததி எனக்கு நீ தான் முக்கியம். காசு முக்கியம் இல்லன்னு முடிவு செஞ்சிட்டேன். இந்த விவாகரத்து கடிதமெல்லாம் இனி நமக்கு தேவை இல்லை.அத  எங்காவது தூக்கிப்போடு" என்றான் பதற்றமாக 

" இல்லை அரவிந்த் நான்  நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். உங்களது தொழில் தான் மிக முக்கியம். தயவு செஞ்சி அந்த கடிதத்தை பிரிச்சுப் பாருங்க" என்றாள் 

அரவிந்த் கனத்த மனதோடு அந்த கடிதத்தைப் பிரித்தான். அதில் "  எப்போதும் உங்களோடு இருப்பதைப்போல் போல் ஒரு வேலை உங்கள் நிறுவனத்தில் இருந்தால் எனக்கு தர வேண்டுகிறேன். இப்படிக்கு உங்கள் அன்பு மனைவி அருந்ததி " என்று எழுதி இருந்ததைக்கண்டு சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனான் அரவிந்த் 

அப்படியே தன் மனைவி அருந்ததியை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். 

" இனி ஒரு நொடி கூட  உன்ன பிரிய மாட்டேன் அருந்ததி " என்று அவளது காதருகே அவனது குரல் ஒலித்தது. இனி எப்போதும் ஒலிக்கும். 

No comments: