ஒரு மழை நாளில்

கோலாலம்பூரில் உள்ள பிரபல விளம்பர நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞன் கார்த்திக். தினமும் தனது மோட்டாரில் தான் வேலைக்கு போவான். போகும் வழியில் உள்ள நாசி கண்டாரில் வழக்கமாக காலை உணவு சாப்பிட்டுவிட்டு செல்வான்.

அன்றும் வழக்கம் போல் அந்த கடையில் பசியாறிவிட்டு வெளியே வந்த போது நல்ல மழை. தனது பையில் விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் கேமெரா இருப்பதால் அது மழையில் நனைந்துவிடுமோ என்று பயந்து கடைவாசலில் மோட்டாருக்கு அருகே சிறிது நேரம் காத்திருந்தான்.

அப்போது அங்கு போலீஸ் உடுப்பு அணிந்த ஒருவர் மோட்டாருக்கு அருகில் நின்று அதையே உற்றுப் பார்க்கிறார்.

நேராக கார்த்திக்கிடம் வந்த அவர் அவனது மோட்டாரை காட்டி இது யாருடையது என்றார்.

"இது என்னுடையது தான்" என்றான் கார்த்திக்.

"இந்த நம்பர் மோட்டார் காணாம போயிருச்சுன்னு எங்களுக்கு புகார் வந்திருக்கு. அதனால அது விசயமா உங்களை விசாரணை செய்யணும். வாங்க பாலாய் போலீஸ் ( போலீஸ் ஸ்டேஷன்) போகணும்" என்றார் போலீஸ்காரர்.

"சார் ..ஒரு வாரத்திற்கு முன்னாடி பேஸ்புக் மூலமா ஒருத்தர் எனக்கு அறிமுகமானாரு. அவரிடம் இருந்து தான் இந்த மோட்டாரை விலைக்கு வாங்கினேன்" என்றான் கார்த்திக் அதிர்ச்சியாக.

பேஸ்புக் வழியாக அறிமுகமான அந்த நபரின் பெயர் என்ன? என்றார் போலீஸ்காரர்.

அவர் பெயர் ராகவன் என்று கார்த்திக் கூறியதும், தனது செல்பேசியில் யாரிடமோ பேசிவிட்டு வந்த போலீஸ்காரர், "தம்பி இந்த மோட்டார யாரோ திருடிட்டாங்கன்னு புகார் கொடுத்திருக்குறதும் அதே ஆளு தான்" என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டார்.

அதிர்ச்சியடைந்த கார்த்திக் , "சார் .. நான் அவர்கிட்ட இந்த மோட்டாரை வாங்குனதுக்கு எல்லா ஆதாரங்களும் இருக்கு. தயவு செஞ்சி என்னை நம்புங்க" என்றான்.

அவன் உண்மையை தான் சொல்கிறான் என்பதை அவனது கண்களை பார்த்தே புரிந்து கொண்ட போலீஸ்காரர். "தம்பி நீங்க உண்மைய தான் சொல்றீங்கன்னு தெரியுது.இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷன் வந்து உங்க கையில இருக்குற ஆதாரங்களை எல்லாம் காட்டி ஒரு புகார் பதிவு செஞ்சிருங்க. பேஸ்புக் மூலமா இப்படி பல திருட்டு வேலைகள் நடக்குது" என்றார்.

"சரி" என்று கார்த்திக் தலையாட்டினான்.

"தம்பி... நீ என்ன விட்டு ஓட மாட்டேன்னு தெரியும். இருந்தாலும் என் கடமைய செய்யணும்ல. உன் மோட்டருலையே ரெண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷன் போயிருவோம்" என்றார் போலீஸ்காரர்.

போலீஸ்காரரின் சந்தேக புத்தியை நினைத்து எரிச்சலடைந்த கார்த்திக் தனது மோட்டாரின் பின்னால் அவரை உட்கார வைத்து கொண்டு கிளம்ப முயற்சிக்கும் போது மழை அதிகமாகிறது.

தயங்கிய கார்த்திக் "சார் ஒரு நிமிஷம்" என்று கூறிவிட்டு நாசி கண்டார் கடைக்குள் சென்றான்.

அங்கு இருந்த கேஷியரிடம், "அண்ணே இந்த பேக் இங்க இருக்கட்டும். அப்புறம் வந்து வாங்கிக்கிறேன்" என்று அனுமதி கேட்டான்.

தினமும் கடைக்கு சாப்பிட வந்து போவதால் கேஷியர் அவனுக்கு நல்ல நண்பர்.

"ஏன் தம்பி போலீஸ் வந்திருக்கு ஏதாவது பிரச்சனையா?" என்று கேஷியர் கேட்கிறார்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லைண்ணே. மழையா இருக்கு. தண்ணிபட்டா உள்ள இருக்குற லேப்டாப் கெட்டுப்போயிரும். கொஞ்ச நேரத்துல திரும்ப வந்து வாங்கிக்கிறேன்" என்று கூறிவிட்டு பேக்கை கேஷியரிடம் கொடுக்கிறான்.அதை வாங்கி தனது இருக்கைக்கு கீழே வைத்துவிட்டு தனது வேலைகளை கவனிக்கிறார் கேஷியர்.

கார்த்திக், போலீஸ்காரருடன் ஸ்டேஷேன் முன் வந்து மோட்டாரை நிறுத்தினான். அப்போது போலீஸ்காரரின் போனுக்கு ஒரு அழைப்பு வருகிறது.

"ஓ ..அப்படியா? எங்க? சரி நான் போறேன்" என்று போனில் கூறிய போலீஸ்காரர் "தம்பி எனக்கு அவசரமா ஒரு வேலை வந்திருச்சி. நான் உடனே போனும். நீங்க என்ன பண்ணுங்க.. உள்ளே போய் இந்த நம்பர கொடுங்க. இது தான் இந்த மோட்டாரின் மேல் கொடுக்கப்பட்டிருக்குற புகார் நம்பர். இதை குடுங்க அவங்களுக்கு தெரியும்" என்று ஒரு துண்டு பேப்பரில் எழுதி கொடுக்கிறார்.

அதை வாங்கிக்கொண்டு உள்ளே போன கார்த்திக்குக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்படி ஒரு புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்பதை அறிந்து குழப்பமடைகிறான்.

திடீரென்று ஏதோ ஒரு யோசனை வந்தவனாக வெளியே ஓடி வந்து மோட்டார் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் பார்கிறான். மோட்டார் அங்கே இருப்பதை கண்டு அவனது மனம் நிம்மதியடைகின்றது.

"யார் அவன் ... ஏன் நம்மகிட்ட இப்படி ஒரு பொய் சொல்லி இங்க கூட்டிகிட்டு வரணும். மோட்டார் திருடனா இருப்பானோ?" என்று அடுக்கடுக்கான கேள்விகளுடன் மீண்டும் சாப்பாட்டு கடைக்கே திரும்புகிறான்.

அங்கே கேஷியர் கடும் கோபத்தில் உட்கார்ந்து இருக்கிறார். கார்த்திக்கை பார்த்ததும் "ஏம்பா உன்னை நம்பி தானே உன் பேக்கை வாங்கி வச்சேன். அது ஒரு திருட்டு பொருள்னு எனக்கு தெரியவே தெரியாது" என்று கூறுகிறார்.

குழப்பத்துடன் அவரை பார்த்த கார்த்திக் "அண்ணே என்னனே சொல்றீங்க? திருட்டு பொருளா?" என்கிறான் கார்த்திக்.

"இப்ப தான் அந்த போலீஸ்காரர் வந்து உன் பேக்கை வாங்கிட்டு போறாரு. ஏய்யா இப்படியெல்லாம் பண்றீங்க?" என்றார் கேஷியர்.

கார்த்திக்குக்கு எல்லாம் புரிந்துவிட்டது. "எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க.. அடப்பாவிங்களா" என்று எண்ணிக்கொண்டே மீண்டும் அந்த போலீஸ் ஸ்டேஷனை நோக்கி மோட்டாரில் வேகமாகச் செல்கிறான்.

No comments: