பலமுறை கடவுளைப் பார்த்திருக்கிறேன்....
என்னை இயல்பாய் கடந்து சென்றிருக்கிறார்...
நிரந்தர வடிவம் இன்றி
ஒவ்வொரு முறையும் புதிய வேடத்தில்....
வடிவத்தில்....ரூபத்தில்...
நான் தீவிர பக்தனும் இல்லை...
தினமும் பூஜிப்பவனும் இல்லை....
பெயரில் உள்ள கடவுளின் சொல்லைக் கூட
எங்கும் குறிப்பிடுவதும் இல்லை....
என்றாலும் ...
உயிரின் செறிவை...ஆழ்கடலின் ஆழத்தை...
ஆகாயத்தின் அசாத்திய உயரத்தை....
கடவுளின் சந்திப்பு கண்முன்னே நிறுத்துகிறது...
கூச்சமின்றி கடவுளை ஆரத்தழுவி
கதறி அழத் தோன்றும்...ஆனால்
சலமின்றி அங்கிருந்து நகர்ந்துவிடுவார்....
அதன் பின் எந்த ஒட்டுறவும் இருக்காது...
நன்றிக் கடனை விரும்பாத
நான் கண்ட கடவுள்
கடமையை செய்துவிட்டு
கண்டும் காணாததது போல்
கடந்து செல்கின்றார்...

No comments:
Post a Comment